அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில், கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால், ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், ஆராயவும் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் தலைமையில், இக் கூட்டம் நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேசத்தில் 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன் ஆயிரத்து 211 குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்கான சமைத்த உணவுகள் திருக்கோவில் பிரதேச செயலகத்துடன் இணைந்து பொது அமைப்பக்களாலும் வழங்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் இயல்பு வாழ்க்கையினை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, வெள்ளம் காரணமாக இறந்து போன கால்நடைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுமாறு திருக்கோவில் பிரதேச செயலாளர் துறைசார் உத்தியோகத்தர்களுக்கு பணித்திருந்தார்.
கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலக துறைசார் அதிகாரிகள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கிழக்கு மாகாண தம்பிலுவில் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர், சாகாமம் காஞ்சிரம்குடா இராணுவ முகாம் கட்டளை அதிகாரி, கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.