உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் அம்பாறை பிரபல பொதுப் பாடசாலை ஒன்றின் உயர்தர விவசாய ஆசிரியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் ஈடுபட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், குறித்த ஆசிரியரின் வீட்டில் அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளைக் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் டியூசன் நடத்துபவர் எனவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளின் முதலாம் பாகத்தை சந்தேகநபர் ஜனவரி 8ஆம் திகதியும், இரண்டாம் பாகம் ஜனவரி 10ஆம் திகதியும் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.