தேசிய மற்றும் சர்வதேச கடன் முகாமைத்துவம் அல்லது அரச கடன் சேவைகளை சிறந்த வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக, நிதியமைச்சின் கீழ் சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதித்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டு அரச கடன் முகாமைத்துவத்திற்கான பொறுப்பை, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து நீக்கி நிதியமைச்சின் தனியான சுயாதீன நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரச நிதியை, மத்திய வங்கிக்கு வெளியே மிக சுயாதீனமான வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு இடமளிப்பதே இந்த புதிய நிறுவனம் ஸ்தாபிப்பதற்கான நோக்கமாகும்.
அந்தவகையில் நிதியமைச்சில் தற்போது புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையான சட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிக்கையில்,
தற்போது தயாரிக்கப்பட்டுவரும் மேற்படி சட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மேலதிகமாக அந்த சட்டத்திற்கிணங்க, புதிய நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மற்றும் சர்வதேச கடன் முகாமைத்துவம் அல்லது அரச கடன் சேவைகளை சிறந்த வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக, நிதியமைச்சின் கீழ் சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கை காலத்தின் தேவையாகும்.
இதனூடாக மிகவும் சாத்தியமான பெறுபேறுகள் நாட்டிற்கும் அரச நிதி நிர்வாகத்தினருக்கும் பொதுவாக பொதுமக்களுக்கும் உரித்தாகும் புதிய வேலைத் திட்டம் இதுவாகுமென குறிப்பிட்டுள்ளார்.