தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் கட்சிகள் அனைத்தும் பதவி பட்டங்களை துறந்துவிட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு எங்களுடைய தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும். எங்களுடைய பலவீனங்கள் தான் எதிரிகள் சிறந்தமுறையில் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். என கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் அவரது கட்சியான தமிழ் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமைக்காரியாலயம் நேற்று வியாழக்கிழமை 18 திறந்துவைக்கப்பட்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சி ஆரம்பித்து 7 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 8 ஆசனங்களை பெற்றோம் அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று 72 வருட வரலாற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்த பெருமையை நிரூபித்துகாட்டினோம்.
அம்பாறை மாவட்ட மக்கள் எங்கள் கட்சிக்கு அத்திவாரம் இட்ட மக்கள் அவர்களின் நன்றியை ஒருபோதும் மறக்கமாட்டேன். அடுத்த தேர்தலில் யாருடன் இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் மத்திய குழு கூடித்தான் நாங்கள் முடிவு எடுப்போம். அதேவேளை சிறந்த கூட்டணிகள் தமிழ் தரப்பில் இருந்து வருமாயின் அதனுடன் சேர்ந்து கேட்பதற்கு நாம் தயார். பொதுவாக இரண்டு முறை தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றம் சென்றிருக்கிறேன்.
அதன் அடிப்படையில் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியை ஆரம்பித்து இன்று நாங்கள் தனித்துவமாக செயல்பட்டு இருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் இலங்கைத் தமிழர் மகாசபையினுடைய கட்சியில் போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் எமது பலத்தை நாம் நிரூபித்துக் காட்டினோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழர்களுடைய பாரம்பரிய கட்சி அது உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்டு 22 ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட வரலாறுகள் இருக்கின்றது. ஆனால் தற்போது இருக்கின்ற தலைமைத்துவங்கள் பலவீனத்துடன் காணப்படுவதனால் அக்கட்சி உடைந்து கொண்டிருக்கிறது. மக்களும் இன்று அக்கட்சியை நிராகரித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அது மட்டுமல்லாது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட தரப்பினரை விசாரிக்க வேண்டுமென்று அவர்களே கூறி இருக்கின்றார்கள். இந்த விசாரணையின் முடிவுகள் உண்மையோ பொய்யோ என்பதை விட மக்கள் இன்று யார் கொலைகாரர்கள் என்பதை புரிந்தும் இருக்கின்றார்கள்.
நான் மட்டக்களப்பு மண் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன் எங்களுடைய மக்களின் மரியாதை இன்று காற்றிலே பறக்கிறது இதனால் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்-என்றார்.