69 இலட்சம் மக்களின் ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் ஏறிய அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களாலேயேயா சிதைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெரும்பான்மையான ஆணையை வழங்கிய நிலையில் உருவாக்கப்பட்ட அரசாங்கம் எங்கள் சொந்த தலைவர்களால் சிதைக்கப்பட்டதில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருந்தாலும், ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை எவராலும் மாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம் நான்கு வருடங்களின் பின்னர் அதிபர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்று ஆட்சிபீடமேறிய கோட்டாபய ராஜபக்சவின் சீர்கெட்ட நிர்வாக திறன் காரணமாக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து பாரிய போராட்டத்தை நடத்திய நிலையில் அவர் ஆட்சிபீடத்தை துறக்கவேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது என்றார்.