கடந்த 21 ஆம் திகதி ஹட்டனில் நடைபெற்ற, தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு செலவுகள் பற்றியும் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது எனவும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான திருவிழா முதன்முறையாக ஹட்டனில் நடைபெற்றது. இந்திய வம்சாவளி தமிழ் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வருட பாரம்பரியத்தை அங்கீகரிப்பதற்காகவும், நினைவுகூருவதற்காகவும் ஹட்டன் தெரிவு செய்யப்பட்டது.
பெருந்தோட்ட மக்களின் இதயப் பகுதியில் தேசிய நிகழ்வொன்றை நடத்த முடிந்ததையிட்டு நான் பெருமையடைகிறேன் என அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செலவு மிகுந்த ஆடம்பர களியாட்டமாக இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை எனவும் தேசிய தைப் பொங்கல் திருவிழா ஒரு அரை நாள் நிகழ்வாகும், இது உள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது மற்றும் விலையுயர்ந்த திறமைக்கு பதிலாக கலாச்சார செழுமையை மையமாகக் கொண்டது.
விருது வென்ற தென்னிந்திய நடிகைகள் அழைத்து வரப்பட்டமை அற்பமான விடயமல்ல எனவும் சமூகத்தை வலுவூட்டும் நோக்கில் அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுடனான எனது நீண்டகால உறவுகளின் அடிப்படையில் எனது தனிப்பட்ட அழைப்பின் பேரில் அவர்களின் வருகை எளிதாக்கப்பட்டது. இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகைகள் இலங்கை விஜயம் செய்திருந்தனர்.