மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை அமைச்சரவையில் ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
2022 மே 30 ம் திகதி மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சுகாதார துறை மூன்று வாரங்களிற்குள் வீழ்ச்சியடையும் என அமைச்சரவையில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் அதனை பயன்படுத்தி தரம் குறைந்த மருந்துகளை அரசாங்க மருத்துவமனைக்கு விநியோகம் செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் உதவியில் எஞ்சியிருந்த நிதியை கூடிய விரைவில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை வகுக்குமாறு அவர் விடுத்த வேண்டுகோளை அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை தொடர்ந்தே சந்தேக நபர் இவ்வாறு நடந்துகொண்டார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தன்முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்தில்எடுத்த நீதவான் இந்திய கடன் உதவியை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மருந்துகள் குறித்தும் உள்ளுர் மருந்து விற்பனையாளர் விநியோகித்த மருந்துகள் குறித்தும் ( இந்த நிறுவனமே தரங்குறைந்த மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளது தரம்குறைந்த இம்யுனோகுளோபளின் மருந்தினால் பொதுமக்களிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.