சுகாதார தொழிற்சங்க ஊழியர்களால் நாடளாவிய ரீதியில் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பல வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையிள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-305-edited.png)
இதனால் அவசர சிகிச்சைப்பிரிவு சேவைகளுக்கான கடமைகளில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெளிநோயாளர் பிரிவில் வைத்தியர்கள் மாத்திரமே கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில், வெளிநோயாளர்களுக்கான மருந்தக உத்தியோகத்தர்களும் கடமையை பகிஷ்கரித்துள்ளதுடன் மருந்தகமும் மூடப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் வைத்தியசாலை ஊழியர்கள் முதற்கட்டமாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் மட்டக்களப்பு, ஏறாவூர் மற்றும் செங்கலடி வைத்தியசாலைகளுக்கு இன்று சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் வைத்திய சேவை ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் 2வது நாள் பணிப்பகிஸ்கரிப்பினால் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
இன்று இரண்டாவது நாளாகவும் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளிகள் வைத்திய சேவையைப் பெற பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-306-edited.png)
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் இன்று வைத்தியர்கள் மாத்திரம் கடமைக்கு வருகை தந்திருந்தனர். வெளி நோயாளர் பிரிவு பகுதியில் பல மணித்தியாலமாக நோயாளிகள் காத்திருந்ததுடன், சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் மருந்து வழங்கும் பிரிவும் முற்றாக இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் நடைபெற்று வரும் வைத்திய சேவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பால் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் திரும்பிச் செல்லும் அவல நிலை காணப்படுகிறது.