இன்றைய கால கட்டத்தில் சகலராலும் பேசப்படும் விடயமாக உத்தேச புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் காணப்படுகிறது. இதற்கு அரசியற் கட்சிகள், அரசியல்வாதிகள், வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள் என சகல தரப்பினரும் தமது எதிர்ப்பினை தெரிவிக்க காரணம் என்ன என ஆராய்ந்து பார்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
உத்தேச புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு மேற்குறிப்பிட்ட சகலரும் எதிர்க்க காரணம், குறித்த சட்டத்தின் மூலம், உள்நாட்டு யுத்தத்தின் போது இல்லாத அளவு அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதாவது எந்தவொரு பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. எந்தவொரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதிமன்றங்கள் ஊடாக ஊரடங்கு உத்தரவை பெற்றுக்கொள்ள, ஆட்கள் கூடுவதைத் தடுப்பதற்கான உத்தரவை பெற்றுக்கொள்ள மற்றும் கூட்டங்கள் நடத்துதல், பேரணிகளை நடத்துதல் மற்றும் வேறு ஏதேனும் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை தடுப்பதற்கு உத்தரவை பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உள்ளது. மேலும் மூன்று நாட்கள் வரை எந்தவொரு அசையும் சொத்தையும் (நிலம் அல்லாதவை) அரசுடமையாக்கவும், குறித்த கோரிக்கையை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னர் 90 நாட்கள் வரை சொத்துக்களை அரசுடமையாக்கவும் பொலிஸாருக்கும் அதிகாரம் வழங்கப்படும்.
குறித்த சட்டமூலத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு புதிய அதிகாரங்கள் கிடைக்கப்பெறும் அவை தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரங்களாகும். ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைப்பையும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க வாய்ப்பு கிடைக்கும். தனிநபர்களின் செயற்பாடுகளுக்கு பல்வேறு வழிகளில் தடை விதிக்குமாறு உயர் நீதிமன்றத்தை கோருவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அத்தோடு 24 மணித்தியாலங்கள் வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்படுவதுடன் எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை அமுல்படுத்த அதிகாரம் கிடைக்கும். எந்தவொரு பகுதியையும் ”தடைசெய்யப்பட்ட வலயமாக” அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்க கூடும்.
மேலும் இலாபகரமான அரசு சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக, விடய நிபுணர்களின் ஆலோசனையின்றி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக இழப்பீடு வழங்காமல் முன்னெடுக்கப்படும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராக மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதாவது அரசாங்க நடவடிக்கைகளால் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாகிப் பாதுகாப்பிற்காகப் போராடும் மக்கள், அடிப்படைத் தேவைகள் இன்மை, சமூகப் பாதுகாப்பு இல்லாமை, உணவுப் பாதுகாப்பிற்கான முறையான நடவடிக்கைகள் இன்மை போன்ற காரணங்களால் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் தரப்பினர்கள், அரசியலமைப்புச் சுதந்திரம், வாழ்க்கை ஊதியம், தொழிலாளர்களின் நியாயமான நடத்தை ஆகியவற்றிற்காக குரல் கொடுக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள்/செயல்பாட்டாளர்கள் மற்றும் பொது வளங்களில் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் தொழிற்சங்க ஆர்வலர்கள், பன்முகத்தன்மைக்கு அழைப்பு விடுக்கும் பல்வேறு அரசியல் குழுக்கள் பத்திரிகையாளர்கள், சமூக ஊடக ஆர்வலர்கள்,கலைஞர்கள் போன்றோரை இந்த உத்தேச புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி ”பயங்கரவாதிகள்” என பெயர் சூட்டமுடியும்.
இதனூடாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயலையும் பயங்கரவாதச் செயலாகக் குறிப்பிட முடியும்.
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், திருட்டு, தாக்குதல் போன்ற தண்டனைச் சட்டத்தின் கீழ் சாதாரண குற்றங்களாகக் கருதப்படும் நடவடிக்கைகளும் இதன் கீழ் எடுக்கப்படலாம். பேச்சு சுதந்திரம், ஒன்று கூடுவது போன்ற அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளின் படி செயற்படுவதை கூட பயங்கரவாதம் என்று கூறலாம். அரசாங்கத்திற்கு எதிரான, எதிர்ப்பாகக் கூறப்படும் எந்தவொரு செயலையும் ”பயங்கரவாத நடவடிக்கை” என்று குறிப்பிட இந்த சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்படும்.