மகிமை நிறைந்த மகா சிவராத்திரி இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. விடிய விடிய கண் விழித்து நான்கு கால அபிஷேகங்களையும் தரிசனம் செய்து சிவனை வணங்கினால் குபேரனாகும் யோகம் தேடி வரும். சிவனை வணங்க ஆடம்பரம் அவசியமில்லை. மனதில் தூய்மையோடும், பக்தியோடும் சிவனை நினைத்தாலே கேட்ட வரம் கொடுப்பார்.
மகா சிவராத்திரி மகிமை நிறைந்தது. கருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் சிவராத்திரியின் மகிமைகளைப் பற்றிப் பலவாறாகக் கூறுகின்றன. மகாசிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்றார் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும்.
மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமை சுக்கிரவார பிரதோஷத்துடன் இணைந்து மகா சிவாராத்திரி வருவது சிறப்பு வாய்ந்தது.
சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த இராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள். தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.
மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும்.
ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும் இது நித்திய சிவராத்திரி ஆகும். தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்.
திங்கட்கிழமையன்று சதுர்த்தசி திதி பகலும், இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால், அது யோக சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரியை இவ் வருடம் வருகிறது. அதாவது,யோகியர் மறந்திடாத சிவராத்திரி ஆகும். அனைவரையும் யோகிகளாக மாற்ற கூடிய சிவராத்திரி.
மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும் மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என்கிறார் அகத்தியர்.
இந்த சிவராத்திரி பூஜையால் பெண்களுக்கு இழைத்த துரோகம், பெண்களுக்கு செய்த சாபம், பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும். அதே போல, ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால் கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும் என சிவ மஹா புராணம் கூறுகிறது.
சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்கிறது புராணம். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை படிப்பதால் நோய்கள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.
சிவலிங்கம், உருத்திராட்சம், இரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம். சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.
சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள்.
சிவராத்திரி நாளில் பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த போது பொங்கி வந்த ஆலகால விஷம் மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று எண்ணிய சிவபெருமான், ஆலகால விஷத்தினைத் தனது கண்டத்தினுள் தாங்கி நீலகண்டனாக மாறி உலகத்தை அழிவில் இருந்து காத்தது இந்த சிவராத்திரி நாளில்தான். அன்னை உமாதேவி ஈசனின் கண்ணை மூடியதால் விளைந்த குழப்பத்தை நீக்கிக்கொள்ள விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாளில்தான். சிவனின் இடபாகத்தினை அன்னை பார்வதி பெற்ற தினம் இந்த நாள்தான்.
சிவராத்திரி விரதம் இருந்து மகாவிஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.
பிரம்மா தனது படைப்புத் தொழிலை தொடங்கிய இந்த நாளில்தான். இந்திரன் தேவலோக அதிபதியாக மாறியதும் இந்த நாளில்தான். குபேரன் செல்வத்தின் அதிபதியான நாளும் இந்த நாள் தான். எனவேதான் மகா சிவராத்திரி நாளில் விடிய விடிய கண் விழித்து ஈசனை வணங்கினால் குபேர யோகம் தேடி வரும் என்கின்றனர்.
சிவனாரின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான், லிங்கோத்பவராக பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி காட்சி அளித்ததும் மகாசிவராத்திரித் திருநாளில்தான். அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றதும் இந்த நாளில்தான்.
கண்ணப்ப நயினார் சிவபெருமானுக்காக தனது கண்களை தானமாக அளித்ததும் இந்த நாள்தான். சிவபெருமான் தனது பக்தன் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்த தினம் சிவராத்திரி. இன்றைய தினத்தில் விரதம் இருந்து சிவ ஆலயம் சென்றால் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும்.
மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம், மகா சிவராத்திரி விரதம். இந்த நாளில் உபவாசம் இருக்கவேண்டும். அதாவது சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். கண்விழித்து ஈசனை நினைந்து உருகி வழிபடவேண்டும். இன்றையதினம் மகா சிவராத்திரி. இந்தநாளில் முடிந்தவரைக்கும் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வோம். முடிந்தவர்கள், விரதம் மேற்கொள்ளுங்கள். அருகில் உள்ள ஆலயங்களில் இரவில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொள்வோம். சிவராத்திரி நாளில் விடிய விடிய நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடத்த வேண்டும். வாசனை மலர், அலங்காரத்தை விடவும், வில்வ அர்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது.
நான்கு கால பூஜைக்கு முன்பாக நடராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமானையும் வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் இலிங்கோத்பவரையும், நான்காம் ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தியையும் வழிபட வேண்டும்.
இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடு செய்ய முடியாவிட்டாலும், இலிங்கோற்பவ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்று நான்கு ஜாம பூஜைகளில் பங்கேற்க முடியாதவர்கள் இரவு வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம்.
வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய, சிவாய நம வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது புண்ணியம் தரும். மறுநாள் அதிகாலையில் குளித்து விட்டு இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
அதேசமயம் 300 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வரப்போகும் மஹா சிவராத்திரி தினம் மிகவும் சிறப்பானதென கூறப்படுகிறது.
இலங்கையில் முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட பஞ்ச ஈஸ்வரங்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் இன்று சிவராத்திரி பூஜைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நான்கு ஜாமப் பூஜைகளுடன் இலிங்கோற்பவருக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.