S4D நிகழ்ச்சித்திட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட பெண்கள் கிரிக்கெட் போட்டியில் கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயம் அணி சம்பியனாக மகுடம் சூடியது.
மாகாணக்கல்வித் திணைக்களமானது யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய S4D நிகழ்ச்சித்திட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாவட்ட மற்றும் மாகாண மட்ட பெண்கள் மென்பந்து சுற்றுப் போட்டியில் அம்பாறை தெகியத்தகண்டி வலயத்தின் தொலகந்த மகா வித்தியாலய அணியை வீழ்த்தி மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலய அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
சிவாந்தா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நிகழ்வானது நேற்றையதினம் (04.05.2023) நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தொலகந்த மகா வித்தியாலய அணியினர் 05 ஓவர்கள் முடிவில் 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள, 72 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலய அணியினர் 4 ஓவர்கள் 5 பந்துகள் நிறைவில் 73 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கிண்ணத்தை தம்வசமாக்கிக் கொண்டனர்.
ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலய அணி அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடி தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது.
வெற்றியீட்டிய அணியினருக்கான வெற்றிக் கேடகத்தினையும், போட்டிகளில் பங்குபற்றிய ஏனைய அணிகளுக்கான கிண்ணங்களையும்
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அம்மணி அவர்களும், யுனிசெப் நிறுவன அதிகாரிகளும் வழங்கி கௌரவித்தனர்.
வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலய அணியின் பயிற்றுநராக தவசீலன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.