இலங்கை கைத்தொழில் அமைச்சினால் நடாத்தப்பட்ட குறும்படப் போட்டியில் மட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ‘சுயம்’ எனும் சிங்கள குறும்படம் அகில இலங்கை ரீதியில் 03 ஆம் இடத்தைப் பிடித்து தேசிய மட்டத்திலான விருதினைப் பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் 5 நிமிடங்களுக்கும் 45 வினாடிகளும் கொண்ட திரைப்படமாக அமைந்திருப்பதுடன் குறித்த குறுந்திரைப்படத்தின் இயக்குனர் k. கிஷாந்த் என்பவராலேயே கதை, திரைக்கதை,வசனம், ஒலிப்பதிவு, மற்றும் தொழில் நுட்ப வேலைகள் என்பன இடம்பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தின் பிரதான நடிகர்களாக K.சுகுமாரன், L.துஸ்யந்தன் மற்றும் M.ஜதிஜன் என்போர் நடித்துள்ளதுடன், கலை இயக்கம் M.பிரதிஜன் ,ஆடை வடிவமைப்பு- ஒப்பனை கலைஞர் M.ஜதிஜன் மற்றும் இந்த திரைப்படத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு K.அகலிகா , சிங்கள மொழிபெயர்ப்பு K. புஷ்பலட்சுமி
ஆகியோரினால் இந்த திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
பாடசாலைகள் மட்ட மற்றும் திறந்த வெளியாக நடைபெற்ற இந்த போட்டியில் நாடளாவிய ரீதியில் உள்ள கலைஞர்கள் பங்கேற்றிருந்ததுடன், முதல் மற்றும் இரண்டாம் இடங்கள் பாடசாலை மட்டத்திற்கும் மற்றும் மூன்றாம் இடம் மட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சுயம் குறுந்திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளது.
அதேசமயம் இந்த வெற்றி பெற்ற குறும்படங்களுக்கு கொழும்பு தாமரை தடாக திரையரங்கில் வைத்து சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், இது மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட முதலாவது ‘சிங்கள மொழிமூல’ குறும்படம் மற்றும் விருது வென்ற சிங்கள குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.