”இந்த நாடு உள்ள நிலையில் இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டிற்கு அதிபராக வரவேண்டும் என்பதே சரியானது.முன்னர் இன்றைய அதிபர் தொடர்பில் விமர்சனங்களை செய்தாலும் இன்றைய காலத்தில் அவரின் செயற்பாடே சரியானது” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று(30) மட்டக்களப்பில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்துள்ள நிலையிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி பிரிவு பொறுப்பாளர் க.வேல்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இதன்போது பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலிருந்து பேரணி ஆரம்பமாக தேவநாயகம் மண்டபம் வரையில் வருகை தந்தது.
இதனையடுத்து கூட்டுறவு சங்கங்களினால் இராஜாங்க அமைச்சரிடம் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் சிலவற்றைக் கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இங்கு இராஜாங்க அமைச்சர் பின் வரும் விடயங்கள் தொடர்பாக உரையாற்றியிருந்தார்.
மகேந்திர சிங் தோனி – அணியை வெற்றி பெற செய்வதே அவரது இலக்காக கொண்டு அவருடைய அணிக்கு அனைத்து கிண்ணங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.
இன்று இருட்டுக்குள் திட்டுவதற்கு பலர் உள்ளார்கள், ஆனால் அந்த இருட்டுக்குள் வெளிச்சமேற்ற யாரும் முன் வருவதில்லை.முன்னால் அதிபர் கூப்பிட்டார் யாராவது வந்து நாட்டை பொறுப்பெடுங்கள் என்று ஆனால் யாரும் முன்வரவில்லை.
தற்போது நாடு இருக்கும் நிலைக்கு ரணில் விக்ரமசிங்கவே சரி இந்த நாட்டிற்கு, அதிபரை நான் இதற்கு முன்னர் விமர்சித்திருந்தாலும் இப்போதைய காலகட்டத்திற்கு அவர் தான் சரி என்றார்.