11 வயது சிறுவன் ஒருவனை ஹெரோயின் போதைப் பொருளை கொடுத்து வீதியில் யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொலன்னாவ – ஒபேசேகரபுர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபரான குறித்த பெண், சிறுவனுக்கு ஹெரோயின் போதைப் பொருளை வலுக்கட்டாயமாக கொடுத்து, வீதியில் யாசகத்திற்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 9 ம் திகதி இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சிறுவனிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபரால் அவர் அம்பேபுஸ்ஸ பகுதியில் உள்ள சிறுவர் இல்லமொன்றிலிருந்து கூட்டிச் செல்லப்பட்டு, பின்னர் அந்தப் பெண்ணின் மகனுடன் வீதியில் யாசகத்துக்காக அனுப்பப்பட்டமை தெரியவந்துள்ளது.
சிறுவனின் வாய் மற்றும் தொடை உட்பட, உடலில் பல பக்கங்களில் பல தீக்காயங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.