மூதூர் பிரதேச தமிழ் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (17) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மூதூரில் இயங்கிய 05 அறநெறிப் பாடசாலைகளை மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தின் கீழ் பதிவு செய்வதற்கு மூதூர் பிரதேச செயலக இந்துக் கலாச்சார உத்தியோகத்தரிடம் சென்ற போது அவர் அவ்வாறு பதிவு செய்ய முடியாது என தெரிவித்ததோடு, அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளுடன் தகாத வார்த்தை பிரயோகங்களுடன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்து இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அறநெறி ஆசிரியைகளால் முன்னெடுக்கப்பட்டது.
இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அறநெறி பாடசாலையின் ஆசிரியைகள் , சுலோகங்களை ஏந்தியவாறு 05 அறநெறிப் பாடசாலைகளையும் பதிவு செய், அறநெறி பாடசாலை ஆசிரியைகளை அவமதிக்காதே, அறநெறிப் பாடசாலையை வெளியேற்று,கலாச்சார உத்தியோகத்தரை வெளியேற்று உள்ளிட்ட கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக், திருகோணமலை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் லக்குமிதேவி சிறிதரன் ஆகியோர் வருகை தந்ததுடன் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர்.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அவ்விடத்திலிருந்து களைந்து சென்றனர்.
இதன் பின்னர் திருகோணமலை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் லக்குமிதேவி சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைக்கு அமைவாக 05 அறநெறி பாடசாலைகளையும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அரச சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் இந்த பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அத்தோடு இப்பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி பிரதேச செயலாளரின் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.