உணவு மற்றும் உடையின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மூன்று சிறார்கள் மீட்கப்பட்டதாக மினுவாங்கொடை காவல்நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
விசேட தேவையுடைய 12 வயது சிறுமி மற்றும் அவரது 7 மற்றும் 8 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பாதுகாப்பு கருதி அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மினுவாங்கொடை உன்னருவை பகுதியில் தாய் சிகிச்சை பலனின்றி தரையில் கிடந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சிறுவர்கள் இருவரும் சில காலங்களுக்கு முன்னர் பாடசாலைக்கு சென்றுள்ளதாகவும், நிலவும் வறுமை காரணமாக பாடசாலை படிப்பை கைவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை உத்தியோகத்தர் காவல்துறையினருக்கு அறிவித்ததன் பேரில், மினுவாங்கொடை காவல்துறை பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதி காவல்துறை பரிசோதகர் எம். கே. ரமணி , மூன்று குழந்தைகளையும் தங்கள் பராமரிப்பில் எடுத்துக்கொண்டு தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மூன்று குழந்தைகளையும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உரிய காவலில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.