வாகரை கதிரவெளி புதூரைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தமது மகனின் கண்முன்னே தாக்கி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர் வாகரை பொலிஸ் நிலையத்தில்; மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் கடந்த 25 ஆம் திகதியன்று (வியாழக்கிழமை) பிரதேசத்தில் இல்மனைட் தொழிற்சாலை அமைவதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பதற்கு மட்டக்களப்பிற்கு செல்வதற்காக தயாராக வீதியில் நின்றிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த சிலரால் தாக்குதலுக்குள்ளாக்கட்டிருந்தார்.
இதன்போது அவரது 4 வயது மகனும் உடன் இருந்துள்ளார்.தமது தாயார் தன் கண்முன்னே தாக்கப்படும் சம்பவத்தை கண்டு அச்சமடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
தமக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பாக நீதி கோரி வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு விடயம் தெரியப்படுத்தியதனை அடுத்து அவர் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின் பயனாக கடந்த 29 ஆம் திகதி திங்கட்கிழமையன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகரைப் பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 22.04.2024 ஆம் திகதியன்று வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.
அதன் எதிரொளியாக பிரதேசத்தில் இரு சாராருக்குமிடையில் வாக்குவாதமும் கைகலப்பும் அமைதியின்மையும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.