இந்திய தலைநகர் டெல்லியில், பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மின்னஞ்சல் அனுப்பப்பட்ட முகவரி குறித்த சோதனையில், பயனர் வி.பி.என் உபயோகப்படுத்தி ரஷ்யா டொமைனில் இருந்து மின்னஞ்சலை அனுப்பியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நேற்று (மே. 1) காலை பல்வேறு முக்கிய பகுதிகளில் உள்ள 100 பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக பெற்றோர்கள் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், குழந்தைகள் அவசர அவசரமாக பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் பள்ளிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் பாடசாலைகளுக்கு போலியான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பதிவில்,
“பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வெளியேற்றப்பட்டு டெல்லி காவல்துறை சோதனை செய்து வருகின்றனர். காவல்துறை மற்றும் பள்ளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். பெற்றோர்களும் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் (ஏப். 30) மாலை டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள 50 முதல் 100 பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று (மே. 1) காலையும் பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலும் தனியார் பாடசாலைகள் உள்ள நிலையில் மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
டெல்லி சாணக்யாபுரியில் உள்ள சான்ஸ்கிரிதி பள்ளி, மயூர் விஹார் பகுதியில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகா, நொய்டா, வசந்த் குஞ் பகுதிகளில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, சாக்கெட் பகுதியில் உள்ள அமிட்டி போன்ற பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளான பள்ளிகளின் முழுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரே ஐபி முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
“ரஷ்யாவை தளமாகக் கொண்ட ஒரு டொமைன் ஐடியான ‘sawariim@mail.ru’ இலிருந்து அச்சுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பயனரின் சொந்த ஐபி (இன்டர்நெட் புரோட்டோகால்) முகவரி மறைக்கப்பட்டுள்ளது. IP முகவரிகள் VPN உடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே மின்னஞ்சல் அனுப்பிய நபரின் இணைப்பை கண்டறிவது சவாலாக இருக்கும். மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு செய்த நபரின் விவரங்களைக் கோரி, டெமி அதிகாரப்பூர்வ (டிஓ) கடிதத்தை அனுப்புவதன் மூலம் இன்டர்போலின் உதவியை நாடுவோம். எங்களுக்கு உதவ ரஷ்ய நிறுவனத்தையும் நாங்கள் அணுகுவோம்”என தெரிவித்தார்.