திருகோணமலை சம்பூர் பகுதியில், முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்த பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களையும் பொலிஸாரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தங்களது எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் சமூகம் மாத்திரம் இன்றி சிங்கள தரப்பினரும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பொலிஸாரின் இது போன்ற அராஜக செயற்பாடுகள் தொடரும் எனில், முழு நாடும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பினை தெரிவிப்போம் என்று பெரும்பான்மை இன பெண்மணி ஒருவர் நேற்று (15) கொழும்பில் நடைபெற்ற சமூக செயற்பாட்டாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,
பெண்களிடத்தில் மிக மோசமான முறையில் பொலிஸார் நடந்துள்ளனர், யுத்தம் முடிந்து இதுவரை காலம் கடந்தும் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாத ஒரு சூழ்நிலை இப்பொழுதும் காணப்படுகிறது.
சுதந்திரமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொடுங்கள் என்ற வேண்டுகோளினையே அந்த மக்கள் கேட்டார்கள் ஆனால் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குறைகள் முடிந்தபாடு இல்லை.
பெண்களை கைது செய்வதற்கு பெண் பொலிசார்களை ஈடுபடுத்தாமல், ஆண் பொலிசாரை வைத்து இழுத்து சென்றதற்கு பொலிஸ் மா அதிபரே காரணம், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அனைத்தும் நடக்கின்றது என்று மேலும் தெரிவித்திருந்தனர்.