கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனப் பெயர்ப் பட்டியலை அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்விக் கல்லூரி பயிற்சி நெறியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.
இதனடிப்படையில் மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியல் குறித்த மாகாணக் கல்வி அமைச்சுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வடமாகாணக் கல்வி அமைச்சு தன்னிடம் கிடைக்கப் பெற்ற பெயர்ப்பட்டியலை அவர்களது இணையத்தளம் ஊடாக ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது.
இதனால் வட மாகாணத்துக்கு நிமிக்கப்பட உள்ளவர்களது விபரங்களை அனைவரும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளதோடு யாராவது மேன் முறையீடு செய்ய விரும்பினால் அதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
எனினும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற பெயர்ப்பட்டியல் இது வரை வெளியிடப்படாத நிலை உள்ளது. இதனால் நியமனம் கிடைக்க உள்ளோர் யார் என்ற விபரத்தை எவரும் அறிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
தாமதமின்றி வெளியிட வேண்டும்
அமைச்சில் பணிபுரிவோரால் கூட அதனைப் பார்க்க முடியாத நிலை உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் கிழக்கு மாகாண நியமனத்துக்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து கிழக்கு மாகாண பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாத யாராவது இருந்தால் அதனை விளங்கிக் கொண்டு மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகின்றது.
எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு வெளிப்படைத் தன்மையைப் பேணும் வகையில் வட மாகாணத்தைப் போன்று கிழக்கு மாகாணப் பெயர்ப் பட்டியலையும் தாமதமின்றி வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.