தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிக்கும் வகையில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும், மே 21, 2024 திகதியிடப்பட்ட, 2385/14 எனும் இலக்கம் கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ. 1700 ஆக அதிகரிக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த மே தினத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, குறித்த அதி விசேட அறிவித்தலுக்கமைய, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் கூலி ரூ. 1,350 ஆகவும் உற்பத்தித்திறன் அடிப்படையில் நாளாந்த விசேட கொடுப்பனவு ரூ. 350 ஆகவும் என, மொத்த நாளாந்த சம்பளம் ரூ. 1,700 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில் நாளாந்த வரவு செலவு சலுகைக் கொடுப்பனவும் உள்ளடக்கப்படுவதோடு, ஊழியர் சேம இலாப நிதியம். உள்ளிட்ட கொடுப்பனவுகளை செலுத்துவதில் இந்த தொகை (ரூ. 1,350) கருத்தில் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர மேலதிக தேயிலை கொழுந்திற்கான தலா 1 கி.கி. இற்கு ரூ. 80 என அறிவிக்கப்பட்டுள்ளது.