திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவர்கள் அவ்வாறு பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறுகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டவந்த மாணவர்கள் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கமைய மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.