இலங்கையின் திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மாத்தறை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி சமத் மதநாயக்க ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டு, தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முடிவிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு, சட்ட மா அதிபர், இந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கொடூரமான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை தாக்கல் செய்தார்.
சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் உட்பட 5 பேர், திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குறித்த அதிகாரிகளால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளில், ஒன்றில் முதல் பிரதிவாதியாக இருந்த பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரியை குற்றவாளி என்று நீதிபதி கண்டறிந்தார்.
இதற்காக அவருக்கு ஏழு ஆண்டுகள் கடூழியச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாவது பிரதிவாதி, ஐந்து குற்றச்சாட்டுகளில் நான்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
அவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஏழு ஆண்டுகள் என்ற அடிப்படையில் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மூன்றாவது பிரதிவாதி, ஐந்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
அவருக்கு, ஒரு குற்றச்சாட்டிற்கு ஏழு ஆண்டுகள் என்ற அடிப்படையில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், குறிப்பிடத்தக்க வகையில், இந்த தண்டனைகள் ஒரேநேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.