கென்யாவில் வரிவிதிப்பை கைவிடக்கோரி மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யா கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. வெளிநாட்டு கடனும் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டுவர வரிகளை உயர்த்த அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூடோ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளநிலையில், இந்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வரிவிதிப்பு தொடர்பாக நேற்று (25) நாடாளுமன்றத்தில் ஆசோசனை நடந்துள்ளது. அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, தடுப்புகளை உடைத்தனர். இதனை தடுக்க பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.