நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இளைஞர் சமூகத்தை விவசாயத்துறைக்கு ஈர்க்கும் வகையில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
அது தொடர்பில் நாட்டின் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 160 கிராமங்களை தெரிவு செய்து இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டங்களை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அடுத்த 05 போகங்களில் இந்நாட்டில் நெற்பயிர்ச் செய்கையை இரட்டிப்பாக்குவதே எமது இலக்காகும். இந்த இலக்கை அடைய, நெல் விளைச்சளுக்கான தொழில்நுட்ப பெகேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
நெற் பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில், பல்வேறு பிரதேசங்களில் ஒரு இலட்சம் ஹெக்டெயர்களை தேர்ந்தெடுத்து நெல் விளைச்சலை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.
கடந்த சில ஆண்டுகளாக காலநிலைப் பாதிப்பு காரணமாக பயிர் சேதமும் அதிகரித்துள்ளது. மேலும் சந்தையில் உரங்களின் விலை உயர்வால் நெல் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்திடம் இருந்து MOP உரத்தைப் பெற கோரிக்கை விடுத்துள்ளோம். அதன்படி, 55,000 மெற்றிக் டொன் MOP உரத்தை வழங்குவதற்கு அந்த அமைப்பு இணங்கியுள்ளது.
அடுத்த இரண்டு போகங்களில் நெல் விவசாயிகளுக்கு இலவசமாக MOP உரம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை மானிய அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
அதன்படி, அரசாங்கத்துக்குச் சொந்தமான உர நிறுவனங்கள் தேயிலை பயிர்ச்செய்கைக்கு அவசியமான உரத்தை உற்பத்தி செய்வதுடன், சந்தை விலையை விட 50% குறைவாக அந்த உரங்களை வழங்குகின்றன. இந்த உர மானியத்திற்காக செலவிடப்படும் தொகை 12 பில்லியன் ரூபாவாகும்” என்று மேலும் தெரிவித்தார்.