மட்டக்களப்பு வாகரையில், இல்மனைட் அகழ்வு மற்றும் இறால் பண்ணை திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று (05) பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வாகரை பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டபோராட்டமானது கட்டுமுறிவு சந்தியில் இருந்து ஆரம்பமாகி கதிரவெளி தபால் கந்தோரை சென்றடைந்தது.
தமது கோரிக்கைகளை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தும் முகமாக, ஆயிரம் கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இல்மனைட் தொழிற்சாலையின் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் முகமாக மிக விரைவில் உயர் நீதி மன்றத்தில் வழக்கினை தொடர்வதற்கு சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவ் அமைப்பின் பணிப்பாளர் கேமானந்த விதானகே தெரிவித்தார்.
போராட்டத்தில் வேலன் சுவாமி, சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலைய பணிப்பாளர் கேமானந்த விதானகே மட்டக்களப்பு சிவில் அமைப்பின் பிரதிநிதி சிவயோகநாதன் மற்றும் சமூகசேவைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.