சவுதி அரேபியாவிற்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமியரின் முக்கியமான ஹஜ் புனித யாத்திரையில் உலகம் இந்த ஆண்டும் முழுவதும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கெடுத்திருந்தனர். எனினும், இந்த முறை சவுதியில் வெயில் அதிகமாக இருந்த காரணத்தினால் புனித பயணத்திற்கு வந்த யாத்திரிகள் சிலர் உயிரிழந்தனர்.
எனவே அது தொடர்பில் சவுதி அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு என விசா வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டு 18 லட்சம் பேருக்கு இந்த விசா வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த 18 லட்சம் பேருக்கும் தங்குவதற்கான இடம், பயணிப்பதற்கான குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து, உணவு, மருத்துவ உதவி, உதவியாளர்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் ஹஜ் பயணக்குழு செய்திருக்கிறது.
இதற்காக பயணம் மேற்கொள்பவர்கள் ரூ.2.5 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும் ஆனால் இப்படி கட்டணம் செலுத்த முடியாதவர்கள், ‘குறைந்த கட்டணத்தில் ஹஜ் பயணம்’ என்கிற போலியான விளம்பரங்களை நம்பி, போலி முகவர்கள் மூலம் சவுதிக்கு வருகின்றனர்.
இவர்களிடம் சுற்றுலா விசாதான் இருக்கும் ஆனால் ஹஜ் பயணத்தில் பங்கேற்றிருப்பார்கள். இவர்களுக்கு உணவு, உடை, போக்குவரத்து, இருப்பிடம் என வசதியும் கிடைக்காது. முகவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிடுவார்கள். இதனால் பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
ஹஜ் பயணத்திற்கு வந்தவர்கள் நடந்தே பயணத்தை பாலைவனத்தில் கொளுத்தும் வெயிலில் மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் 20 லட்சம் பேர் பங்கேற்றிருந்தனர்.
அதாவது அனுமதிக்கப்பட்டவர்களை விட 2 லட்சம் பேர் கூடுதலாக வந்திருக்கிறார்கள். இப்படி வந்தவர்களில் 1,301 பேர் உயிரிழந்தனர். இதில் 83% பேர் முறையான விசா பெறாதவர்களாவார்கள்.
இதனை சவூதியின் சுகாதார அமைச்சர் ஃபஹத் பின் அப்துல் ரஹ்மான் உறுதி செய்திருக்கிறார். சவுதியில் கடந்த சில நாட்காளாக 51 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்தது.
இப்படியாக அதிகப்படியான வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக, யாத்திரீகர்கள் காலை 11 முதல் மதியம் 3 மணி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
பயணிகள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தங்கும் இடங்களில் ஓய்வெடுத்துக்கொண்டு மாலை பயணத்தை தொடர்ந்தனர். ஆனால், முறையான விசா பெறாதவர்கள் இப்படி தங்க முடியாமல் வெயிலில் தவித்தனர்.
ஜோர்டான், எகிப்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்துதான் அதிக அளவில் முறையான அனுமதியில்லாமல் பயணிகள் வருகின்றனர். இதில் சிலர் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் கூட இருக்கின்றனர் என்று ஹஜ் பயணக்குழு கூறியுள்ளது.
இப்படியான பயணங்கள் தவிர்க்கப்படும் வரை உயிரிழப்புகளை தவிர்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹஜ் பயணத்தின்போது இப்படியான உயிரிழப்புகள் ஏற்படுவது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்னரும் கூட உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 1990, 1994, 1998 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தொற்று நோய்கள் காரணமாகவும், பயணிகள் தங்கியிருந்த குடிசைகள் தீப்பிடித்ததன் மூலமாகவும், நெரிசல் காரணமாகவும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.