ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவை எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் இன்று (17) பகல் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 4 மாணவர்கள், 4 மாணவிகள் உட்பட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அதிகாரி ஏ.எஸ் கே ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளதாவது, பாடசாலையில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாகும்.
அடிக்கடி குளவி கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கின்ற சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தாம் ஒவ்வொரு நாளும் வேதனை அடைய வேண்டிய நிலை இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், குறித்த பாடசாலையில் பின்புறத்தில் உள்ள பாரிய மரத்தில் குளவிகள் கூடு கட்டப்படுவதால் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சனைகள் நிகழ்கின்றன. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிள்ளைகளின் பாதுகாப்பு நலன் கருதி மரத்தில் கட்டப்பட்டுள்ள குளவி கூடுகளை அப்புறப்படுத்தி பிள்ளைகள் பாதுகாப்புடன் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறையுடன் செயற்படுமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.