அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து ஊழல் பணத்தை மீட்டு நாட்டை அபிவிருத்தி செய்யப்போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறை பண்டாரநாயக்க மகளிர் பாடசாலைக்கு இலவச பேருந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திருட்டு, அடாவடி, ஊழல் மற்றும் இலஞ்சம் என்பவற்றை முற்றாக ஒழித்து அவற்றுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம்.இந்த நாட்டை மீண்டும் ஒரு முறை தோல்வியடைய விட மாட்டோம்.
அறிவை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டம் ஒன்றின் ஊடாக நாட்டை வெற்றியடையச் செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம். அரசியல்வாதிகளும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் மோசடி செய்த பணத்தை மீட்டெடுத்து அதனைக் கொண்டு கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் நாட்டை முன்னேற்ற பயன்படுத்துவோம்.
நாட்டை அபிவிருத்தி அடையச்செய்வதாக வாக்களித்து பதவிக்கு வந்த எவரும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் எங்கள் ஆட்சியில் நாங்கள் அதனை உரிய முறையில் மேற்கொள்வோம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.