உத்தியோகபூர்வ பதவியில் இருந்து விலகிய அரச அதிகாரிகள் தொடர்ந்தும் பாவித்து வரும் அரச சொத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி தலைவர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் ஒன்று மூலம் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட அரச சொத்துக்கள், பதவியில் இருந்து விலகிய பின்னரும் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சொத்துக்களை விசாரணை செய்து அவற்றை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரச நிறுவனங்களின் தலைவருக்கு அறிவித்துள்ளது.
மேலும், அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.