2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் காலமானார்.
மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலியாஸ் தனது 78ஆவது வயதில் காலமானார்.
இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் போது யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவானது மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானார்.
இந்நிலையில், அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்னாரின் ஜனாஸா நாளை புத்தளம் பகா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.