சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர்.
இந்த சம்பவத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதி பல மாதங்களாக உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் துறைமுக நகரமான போர்ட் சூடானில் இருந்து வடக்கே 40 கிலோ மீற்றர் (25 மைல்) தொலைவில் உள்ள அர்பாத் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டே உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்தப் பகுதி அடையாளம் காண முடியாத அளவிற்கு அழிந்துள்ளதோடு மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன.
150 முதல் 200 பேர் வரை காணமல் போயுள்ளதுடன் ஏறக்குறைய 50,000 பேரின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி தங்கச் சுரங்கத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதே போன்ற சம்பவம் கடந்த ஆண்டு செப்டெம்பரில் கிழக்கு லிபிய நகரமான டெர்னாவில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
சூடானின் முக்கிய செங்கடல் துறைமுகம் மற்றும் வேலை செய்யும் விமான நிலையத்தின் தாயகமாக இருக்கும் போர்ட் சூடானின் முக்கிய நீர் வளமாக இந்த நீர்த்தேக்கமாகும்.
நீர்த்தேக்கம் உடைந்தமையினால் வரவிருக்கும் நாட்களில் நகரம் வரட்சியால் அச்சுறுத்தப்படலாம் என சூடான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.