டுபாயில் மறைந்திருந்துள்ள போதைப்பொருள் வியாபாரியாக கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (28) காலை டுபாயில் இருந்து வருகை தந்த போது விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் நதின் பாஷிக் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நதின் பாஷிக் மற்றும் அங்கொடை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் பயணித்த வாகனத்தை, வெள்ளவத்தை பகுதியிலுள்ள ஹெவலொக்சிட்டி வீடமைப்புத் தொகுதிக்கு முன்பாக வீதியில் நிறுத்துமாறு சமிக்சை செய்த போதும் கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரை விபத்திற்குள்ளாக்கி கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி தப்பிச் சென்றிருந்தனர்.
பின்னர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்ததுடன், கைது செய்யப்பட்ட இடத்தில் 100 பவுண் தங்கம், 03 கார்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், 19 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
அத்துடன் கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி, 535 திர்ஹம் மற்றும் 161 டொலர்கள் மற்றும் நதின் பாஷிக் என்ற பெயரில் சாரதி அனுமதிப்பத்திரம், துபாய் அரசினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, துபாய் அரசினால் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பயணப் பை, போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இவை மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நதின் பாஷிக் கைது செய்யப்படுவதைத் தடுத்து, ஜனாதிபதியின் சட்டத்தரணி உட்பட சட்டத்தரணிகள் குழுவொன்று விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.