மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற பனிச்சையடி தூய அனைத்துலக நாடுகளின் அன்னைஆலயத்தின் 18 வது வருடாந்த பெருவிழா கொடி இறக்கத்துடன் இன்று நிறைவு பெற்றது
தேவாலயத்தின் பெருவிழா கடந்த 23 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தேவாலயத்தின் பங்குத்தந்தை வின்செஸ் லோஸ் அடிகளார் தலைமையில் பெருவிழாவை முன்னிட்டு நவ நாட்களில் தினமும் மாலை அன்னையின் நவ நாளும், திருச்செப மாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.
இந்த பெருவிழாவின் விசேட நிகழ்வான அன்னையின் திருச்சொரூப பவனி நேற்று (31) மாலை இடம் பெற்றதுடன், இன்று (01) மட்டக்களப்பு மறை மாநில குரு முதல்வர் அருட்பணி ஜோர்ச் ஜீவராஜ் அடிகள் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த திருப்பலி நிகழ்வில் தேவநற்கருணை மற்றும் உறுதி பூசுதல் எனும் அருட்ச சாதனங்கள் வழங்கப்பட்டன. கொடி இறக்கத்தை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த இறுதி நாள் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களையும் சேர்ந்த கிறிஸ்தவ அடியார்கள் பலரும் இங்கு பிரசன்னமாய் இருந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இங்கு நாட்டுக்கு நல்லாசி, இனங்களுக்கு இடையில் நல்லுறவு மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின் ஈடேற்றம் வேண்டியும் இங்கு விசேட பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன .