புதிய இணைப்பு
சற்று முன் சத்துருக்கொண்டான் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் மற்றும் பெண் ஒருவர் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி செல்ல முட்பட்டிருந்தனர்.
பின்னர் குறித்த 5 பேரையும் கொண்டு செல்லாது, எச்சரிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விடுவித்திருத்ததுடன், இராணுவத்தினரின் பெயரையும், முஸ்லீம் ஊர்காவல் படையினரின் பெயரையும் பொரித்த கல்வெட்டை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
இராணுவத்தினர், முஸ்லீம் ஊர்காவல் படையினர் என்னும் பெயரை பயன் படுத்த முடியாது என்றும், வேண்டும் என்றால் பொதுவாக படையினர் என்று மாத்திரம் குறிப்பிடலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் தற்போது அந்த பகுதியில் இராணுவத்தினர் வருகை தந்துள்ளதாகவும், விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் எமது செய்தியாளர் சம்பவ இடத்திலிருந்து தகவல் வழங்கினார்.
முதல் இணைப்பு
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் 1990.09.09 அன்று பனிச்சையடி, கொக்குவில், சாத்திருகொண்டான், பிள்ளையாரடி போன்ற பிரதேசங்களில் 186 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 34 வது நினைவஞ்சலி தினம் இன்று 09 அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன் ஒரு அங்கமாக உறவுகளினாலும், சந்திரகொண்டான் நினைவுதூபி அஞ்சலி ஏற்பாட்டுக் குழுவினர்களாலும் இன்றையதினம், உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் யாரால் கொல்லப்பட்டனர் போன்ற விபரங்களை கல் வடிவமாக தூபியில் பதிக்கும் வேலை ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தூபியை அவதானித்த பிறகு ‘ நீங்கள் இலங்கை இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று எழுதியுள்ளீர்கள். இது சட்டத்திற்கு முரணான செயல் அது மட்டுமல்லாது இங்கு எந்த கொலையும் இடம்பெறவில்லை” எனவும் அங்கு பணி புரிந்த வேலையாட்கள் , ஏற்பாட்டு குழுவினர் என்போரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் இதற்கு பொதுமக்கள் விளக்கமளித்த வேளை, இது தொடர்பில் மேலிடத்திற்கு அறிவிக்கப்பபோவதாக தெரிவித்த இரண்டு பொலிஸாரும், குறித்த தூபியை புகைப்படம் எடுத்து சென்றுள்ளதுடன், தற்போது அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.