தேசிய சிறைக்கைதிகள் தினத்தை (செப்டெம்பர் 12) முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட நாளை (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதார பொருட்கள் நாளைய தினம் ஒரு கைதிக்கு போதுமானதாக வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, அந்த பார்வையாளர்களை பார்வையிடும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.