இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வலப்பனே தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹிரன்யா ஹேரத் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு நேரில் சென்று எழுத்து மூலமாக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.அண்மையில் பொகவந்தலாவை பிரதேசத்தில் அரசாங்க வங்கி ஒன்றின் அதிகாரிகளுக்கும் இளைஞர் ஒருவருக்கும் வங்கி கணக்கு மீதி குறித்து ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையின் போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
பொகவந்தலாவ நகரின் மத்தியில் பொலிஸ் உத்தியோகத்தர்களை அழைத்து அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைச்சர் செயற்பட்டதாக ஹிரன்யா ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே அமைச்சர் ஜீவன் தொண்டமானின் செயற்பாடுகள் குறித்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ஹிரன்யா தனது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.
மேலும் கடந்த 22 ஆம் திகதி அங்குரன்கெத்த பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் அது குறித்து விசாரணை நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.