ஜனாதிபதித் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை நேரத்தில் ரி56 ரக துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை விட்டுச்சென்ற குற்றத்துக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கான்ஸ்டபிள், கம்பஹா உடகஹா வல்பொல கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றும்போது பொறுப்பான அதிகாரிக்கு அறிவிக்காமல் ரி56 ரகத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை விட்டுச்சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தனகல்ல உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் பொறுப்பிலுள்ள குறித்த வாக்களிப்பு நிலையத்தில் பணிகளை நிறைவுசெய்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை யாருக்கும் தெரிவிக்காமல் வாக்களிப்பு நிலையத்திலேயே வைத்துவிட்டுச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைகேடான செயல் காரணமாக நேற்று (21) முதல் அவர் பணியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கம்பஹா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.