வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆதரவாளர் எனக் கூறி நபரொருவர் குழப்பத்தினை ஏற்படுத்தியமையினால் பதட்டமான நிலமை ஏற்பட்டது.
சர்வதேச சிறுவர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அந்த பகுதிக்கு வந்த இனம் தெரியாத நபர் ஒருவர் இது ஜனாதிபதி அநுரவின் ஆட்சி நீங்கள் எல்லாம் வயிறு வளர்க்கிறீர்கள். உங்களுக்கு பணம் வருகின்றது. என போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
உங்களை பொலிஸில் பிடித்துகொடுப்பேன். நான் அனுர குமாரவுடனேயே இருவருடமாக நிற்கிறேன். பொலிஸும் புலனாய்வு பிரிவும் வந்து இப்போது உங்களை கைது செய்வார்கள். நாய்களே எல்லோரும் வீடு செல்லுங்கள் என்று ஒருமையில் கண்டபடி திட்டியுள்ளார்.
இதனையடுத்து காணாமல் போன உறவுகளும் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தின் பின்னர் குறித்த நபர் அவர்களை அச்சுறுத்தியபடி அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றுள்ளார்.