பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பாக போட்டியிடுகின்ற நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையினை பா.அரியநேந்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறமாகும் என்பதனை போராளிகள் சார்பாக நாங்கள் வலியுறுத்துகின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு தம்மை ஒரு தேசியமாக திரட்டி தமிழினத்தின் இனப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமது வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு கணிசமாக வழங்கியிருந்தனர்.
அந்த வகையில், இவ்வகையான கருத்துருவாக்கத்திற்கு தமிழ் பொதுச் சபையினரும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பாக காத்திரமாக செயலாற்றி இருந்தனர்.
அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கின் சிவில் பொதுச்சபையினர் ஆற்றிய பணிகள் இனத்தின் இன்றைய காலத் தேவையாகும்.
தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கின்றபோதும் பொதுவேட்பாளர் தேர்வின்போதும் பின்னரான தேர்தல் பரப்புரைகளின்போதும் அவர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
அந்த வகையில் எமது தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரன் காலத்தின் தேவை உணர்ந்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி தமிழினத்தின் எதிர்காலம் கருதி அவர் செயலாற்றியதை தமிழின வரலாறு குறித்து வைத்துக்கொள்ளும்.
வருகின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பாக போட்டியிடுகின்ற நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையினை பா.அரியநேந்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறமாகும் என்பதனை போராளிகள் சார்பாக நாங்கள் வலியுறுத்துகின்றோம் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.