இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்ட கேப்பாப்பிலவு மக்களின் ஊடக சந்திப்பு கேப்பாபிலவு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தற்போதைய நெருக்கடியில் தமது வாழ்விடங்களை இழந்து வயல் நிலங்களை இழந்து பொருளாதார ரீதியாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் கவலை வெளியிட்டனர்.
இராணுவத்தினரின் வாக்குறுதிக்கு அமைய காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது தொடர்பாகவும் மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அனைத்து விதமான தமது வயல் நிலங்கள் நந்திக் கடல் உள்ளிட்ட மீன்பிடித்த தளங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு ராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமக்கான சமூர்த்தி நிவாரண கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், தேங்காய் இன்றி சமையல் செய்கின்ற நிலை தமக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் தமது தென்னைகளில் தேங்காய்களை பிடுங்கி செல்வதை வேதனையுடன் பார்த்து வருவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.
முல்லைத்தீவிற்கு எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதி வரவுள்ள நிலையில் அன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து அவரிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டன.