அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களை உடனடியாக கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பல நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை 11 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே அவற்றை கையளித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்களுக்கு, உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிப்பதில் பெரும் பின்னடைவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 07 பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை 40 ஆகும், அதன்படி இதுவரை கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை 29 ஆகும்.
இதேவேளை, அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவது மற்றும் செலவினங்களைக் குறைக்கும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சகல அம்சங்களையும் மீளாய்வு செய்வதிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.