நீதிபதிக்கு சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் மிஹாலுக்கு எதிராக, சேறு பூசும் வகையிலான சுவரொட்டிகள் கொழும்பில் ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்படவரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த சுவரொட்டிகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா ஒட்டுமாறு கூறியதுக்கமைய ஒட்டியுள்ளதாக அவர், பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த வழக்கை நேற்று (21) கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்ற உத்தரவின் பேரில் ரங்காவை கைது செய்ய கொழும்பிலுள்ள ரங்காவின் வீட்டுக்கு சென்றபோதும் அங்கு அவர் இருக்கவில்லை என தெரிவித்ததையடுத்து உடனடியாக அவரை தேடிக்கண்டுபிடித்து மன்றில் ஆஜர் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.