ஜனாதிபதியின் ஆசிரியர் ஊழல் முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பாளராகவும், ஆசிரியர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் தன்னிடம் அது தொடர்பில் முறையிடலாம் எனவும் வாட்ஸப், முகநூல் மற்றும் சில சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தி போலியானது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரான டெஸ்மன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
எமது சங்கம் ஆசிரியர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து அநீதிகளுக்கும் குரல் கொடுக்கின்ற அதேவேளை மாணவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கும் குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
இவ்வாறு மாணவர்களுக்கு எதிராக செயற்பட்ட ஆசிரியர் தொடர்பிலும் எங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அது தொடர்பில் எமது சங்கமானது மாவட்ட கல்வி உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதோடு அது தொடர்பான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
இதன் ஒரு பகுதியாகவே ஆசிரியர்கள் தொடர்பிலும் கிடைக்கும் முறைப்பாடுகளை கொழும்பிலுள்ள எமது ஆசிரியர் சங்கத்திற்கும் தெரிவிக்கின்றோம் என ஒரு குரல் பதிவு மூலம் ஆசிரியர்களுக்கு தகவல் வழங்கியிருந்தேன்.
இவ்வாறு நான் பதிவிட்ட குரல் பதிவானது பலருக்கும் பகிரப்பட்டது மட்டுமல்லாமல் இந்த குரல் பதிவை விளங்கிக்கொள்ளாத சிலர் தங்களுடைய முகப்புத்தகத்தில் என்னை ஜனாதிபதி செயலணி என்றும் ஜனாதிபதியின் ஆசிரியர் ஊழல் முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பாளர் எனவும் சித்தரித்து ஒரு போலி செய்தியை எனது தொலைபேசி இலக்கங்களுடன் சேர்த்து பதிவிட்டுள்ளனர்.
உண்மையில் இவ்வாறு வரும் முறைப்பாடுகளை மேல குறிப்பிட்டது போல மாவட்ட கல்வி உயரதிகாரிகளுக்கும் கொழும்பிலுள்ள எமது சங்கத்திற்கு மட்டுமே தெரியப்படுத்தப்படுவதாகவும் எந்த காரணம் கொண்டும் அது எனது தனிப்பட்ட ரீதியாக ஜனாதிபதிக்கோ அல்லது ஜனாதிபதி செயலகத்திற்கோ தெரிவிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் இது உண்மைக்கு புறம்பான செய்தியென்றும், தேர்தல் காலங்களில் அரசியல் செய்யும் சிலர் தமது சங்கம் மீது பிழையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவே இவ்வாறான செய்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்த அவர் இவ்வாறு குரல் பதிவுகள் வரும் போது நன்றாக புரிந்துகொண்டோ அல்லது விடயத்தை உறுதிசெய்து கொண்டோ தகவலை வெளியிடுவது சாலச்சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.