உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சினால் தடை விதிக்கப்பட்டிருந்த ஐந்து முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜம்மிய்யத்து அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா, ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், லங்கா தவ்ஹீத் ஜமாஅத், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் தடையை நீக்க அரசு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் குறித்த அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த விசாரணைக்கு பின் புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளிற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அமைப்புகள் தங்கள் செயற்பாடுகளை வெளிப்படையாக மேற்கொள்வதாகவும் நிதி மூலாதாரங்கள் குறித்த விபரங்களை வெளிப்படைத்தன்மையுடன் பேணிக் கொள்ளவும் பாதுகாப்பு அமைச்சுக்கு உறுதிமொழி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த இந்த குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடலின் பின்னரே இந்த ஐந்து அமைப்புகளின் மீதான தடை நீக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.