நெதர்லாந்தில் நடைபெற்ற இசை திருவிழாவில், கொசுக்கள் (நுளம்புகள்) ஏன் சிலரை மட்டுமே குறிவைத்து கடிக்கின்றன என்பதைக் கண்டறியும் நோக்கில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 500 பேர் பங்கேற்றனர், மேலும் ஆய்வுக்காக ஆயிரக்கணக்கான கொசுக்கள் பயன்படுத்தப்பட்டன. பங்கேற்பாளர்களிடம் உணவு, சுகாதாரம் மற்றும் நடத்தை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர் அவர்கள் கைகளை கொசுக்கள் அடங்கிய சிறப்பு பெட்டியில் வைக்க அறிவுறுத்தப்பட்டனர். அந்த பெட்டியில் உள்ள சிறிய துளைகள் மூலம் கொசுக்கள் மனித வாசனையை உணர்ந்தன, ஆனால் கடிக்க முடியவில்லை.
இந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. பீர் குடித்தவர்கள் கொசுக்களை 1.35 மடங்கு அதிகமாக ஈர்த்தனர் என்பதைக் கண்டுபிடித்தனர். மது அருந்திய பிறகு உடலில் ஏற்படும் வாசனை மாற்றங்களும், வியர்வை அதிகரிப்பும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் விளக்கினர். அதோடு, முந்தைய இரவு ஒருவருடன் படுக்கையை பகிர்ந்தவர்கள், குறைவாக குளித்தவர்கள் அல்லது சன்ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்களும் கொசுக்களை அதிகம் ஈர்த்தனர்.

ஆய்வின் தலைமை விஞ்ஞானி பெலிக்ஸ் ஹோல், கொசுக்கள் நேரடியாக மதுவால் ஈர்க்கப்படவில்லை என்று கூறினார். ஆனால் பீர் அருந்திய பிறகு உடலில் உருவாகும் வியர்வை வாசனை மற்றும் உடல் செயல்பாடுகள் மாற்றம் கொசுக்களை கவர்ந்ததாக விளக்கினார். மேலும், கொசுக்கள் 100 மீட்டர் தொலைவிலிருந்தே மனித வாசனையை உணரக்கூடியவை என்பதும் தெரியவந்தது. இதனால், ஒருவர் தொலைவில் இருந்தாலும், பீர் குடித்தால் கொசுக்கள் அவரை எளிதில் கண்டுபிடிக்கும் என்று தெரியவந்தது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமானவர்கள் என்பதால், முடிவுகள் அனைத்து மக்களுக்கும் பொருந்துமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பல்வேறு வயது மற்றும் சுகாதார நிலைமையிலுள்ள மக்களுடன் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மொத்தத்தில், பீர் அருந்திய பிறகு கொசுக்களால் அதிகம் குறிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.








