ஹொங்கொங் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போன 279 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக்கட்டடத்தில் நேற்று (26) ஏற்பட்ட தீயானது அருகிலிருந்த கட்டடங்களுக்கு பரவியது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்நாட்டின் தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் வீரர்கள் தீயை அணைத்து மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44-ஐ கடந்துள்ளது. இதேவேளை படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 279 பேர் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.








