2026 ஆம் ஆண்டில் இலங்கை பல வெளிநாடுகளுடன் பயனளிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், தூதரக சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் நலனுக்காக பல புதிய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிவிவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
நேற்று ( 05) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள வெளிநாட்டு சேவை நியமனச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்தச் சட்டத்தை திருத்தி புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டமாக இந்த ஆண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ரூ. 10 மில்லியன் வரையிலான வீட்டு கடன் வசதி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
அதேபோல், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண தனிப்பட்ட முறையில் தானே தலையிடுவதாகவும் துணை அமைச்சர் வலியுறுத்தினார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, சமூக ஊடகங்கள் மூலம் புகார்கள் அளிக்க முடியும் வகையில் விசேட விசாரணைப் பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புகார்கள் விரைவாகப் பெறுவதற்காக எதிர்காலத்தில் வாட்ஸ்அப் (WhatsApp) எண் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கூறினார்.








