பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் உடற்பருமன் மற்றும் அதிக எடையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதிக சர்க்கரை, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி அடங்கிய உணவுகளை பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்ய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
இதன்படி ஹாட் டாக், பர்கர், பீட்சா, பிஸ்கட், கேக் மற்றும் பாக்கெட் பானங்கள் போன்றவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்து புதிய சுற்றறிக்கையும், உணவகங்களை கண்காணிப்பதற்கான வழிகாட்டி கையேடும் வெளியிடப்பட்டுள்ளதாக ஊட்டச்சத்து பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பாடசாலை சுகாதார ஆய்வின்படி, 13-17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களில் 12% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடற்பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் கார்பனேற்றப்பட்ட பானங்கள், அதிக உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளுக்கு பழகியிருப்பதால், மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பாடசாலை உணவகங்களை முறையாக ஒழுங்குபடுத்துவது இன்றியமையாதது என சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.








