பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மோசடியாக பணம் வசூலிக்கும் நபர்கள் தொடர்பில் இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு ஒழிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை தங்களது மோசடிக்காக பயன்படுத்தும் சிலர், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அச்சுறுத்தி பணம் கோருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மோசடி சம்பவங்கள் பல பகுதிகளில் பதிவாகியுள்ளதாகவும், இதுகுறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது சுகாதார ஆய்வாளர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்பதோ அல்லது பெறுவதோ இல்லை என்பதால், PHI அதிகாரிகள் என கூறி பணம் கோருபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பொது சுகாதார ஆய்வாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் எவரேனும் பணம் கோரினால், அது தொடர்பில் உடனடியாக பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








